Guru

  •    > Details
  • மிதுனம்(குரு பெயா்ச்சி)

    மிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

    புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுனராசி அன்பர்கள், பிரச்னைகள் எவ்வளவு வந்தாலும் தளராமல் சந்தித்து வெற்றிபெறுபவர்கள். பலர் கடின முயற்சி செய்து முடிக்கும் காரியங்களை தம் அனுபவ அறிவால் மிக எளிதாக முடித்துவிடுபவர்கள் இவர்கள்தான். மிருகசீரிடம் 3 -ம் பாதம் முதல் புனர்பூசம் 3 -ம்பாதம் வரையிலான நட்சத்திரங்களை உள்ளடக்கிய மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்பதைக் காண்போம்.

    இதுவரை மிதுனம் ராசிக்கு 11 ம் வீட்டில் அமர்ந்து பலவித நன்மைகளையும் வாரிவழங்கிக்கொண்டிருந்த குருபகவான் மே 1 -ம் தேதி முதல் 12 -ம் வீட்டில் வந்து அமர்ந்து பலன்தர இருக்கிறார். இனி செலவுகள் கூடும். அவற்றை சுபச்செலவுகளாக மாற்றிக்கொள்வது நல்லது. அலைச்சல்களும் அதிகரிக்கும். சிலருக்கு அவ்வப்போது வீண் கவலையால் தூக்கம் பாதிக்கப்படக் கூடும். புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள். இதுவரை தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

    ராசிக்கு 4 -ம் இடமான கன்னியை குருபகவான் பார்ப்பதால் நல்ல காற்றோட்டமான வீட்டுக்குக் குடிப்போவீர்கள். பழைய வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். அவருக்கான மருத்துவச் செலவுகள் குறையும்.

    ராசிக்கு 6 - ம் வீடான விருச்சிகத்தை குருபகவான் பார்ப்பதால் கடன் பிரச்னை ஒன்றைத் தீர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். நீண்ட நாள்களாக இருந்துவந்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

    ராசிக்கு 8 -ம் வீடான மகரத்தை குருபகவான் பார்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும். பங்குச் சந்தை லாபம் தரும். ஆயுள் விருத்தி உண்டாகும். என்றாலும் தொட்டதெற்கெல்லாம் கோபப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.

    குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

    1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் தைரிய ஸ்தானாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் அதிரடி முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரருக்குத் திருமணம் கூடி வரும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளை ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.

    12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் தனாதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இங்கிதமாகவும், எதார்த்தமாகவும் பேசிப் பல விஷயங்களை சாமர்த்தியமாக முடிப்பீர்கள். திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் அமைதியுண்டாகும்.

    19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25

    வரை உங்கள் சஷ்டம லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் சகோதர வகையிலும், வீடு சொத்துப் பராமரிப்பு வகையிலும் செலவினங்கள் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் வந்துபோகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். புறநகர் பகுதியில் வீட்டு மனை அமையும்.

    வியாபாரம்

    கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகள் கொள்முதல் செய்யும் போது கவனம் தேவை. சந்தை நிலவரத்தை தெரிந்து செயல்படப்பாருங்கள். தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறப் போராட வேண்டி வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சிலர் தன் பங்கைக் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருள்களால் லாபமடைவீர்கள். அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.
       
    உத்தியோகம்

    விமர்சனங்களும், வீண் பழியும் வந்து செல்லும். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளைத் தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்றுத் தாமதமாகக் கிடைக்கும். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டாம். கலைஞர்களே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் ஓயும். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம்.

    இந்த குரு மாற்றம் ஓய்வில்லாமல் உங்களைக் கடினமாக உழைக்க வைத்தாலும், அதற்கேற்ற உயர்வில்லையே என சில நேரங்களில் ஏங்க வைக்கும்.